600 கிலோ கலப்பட பொருட்கள் பல்லாவரம் சந்தையில் பறிமுதல்
பல்லாவரம்: பல்லாவரம் வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று ஆய்வு நடத்தி, 600 கிலோ காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். பல்லாவரத்தில், 80 ஆண்டுகளுக்கு மேலாக, வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தையில், குண்டு ஊசி முதல் 'பிரிஜ்' வரை, வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும். தவிர, பூச்செடிகள், காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. இச்சந்தையில் விற்கப்படும் நெய், தேன், அப்பளம் போன்ற உணவு பொருட்களில், சமீபகாலமாக கலப்படம் அதிகரித்துள்ளதாக, நேற்று முன்தினம், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நான்கு குழுக்களாக பிரிந்து, கடைகள் தோறும் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். காலாவதியான, உண்பதற்கு தகுதியற்ற பிஸ்கட், கலர் அப்பளம், வண்டு, புழுக்கள் இருந்த அரிசி, நுாடுல்ஸ், கருப்பட்டி, மசாலா பொருட்கள், சாக்லேட், ரஸ்க் என, 600 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது போன்று கலப்பட உணவு பொருட்கள் விற்பனை செய்தால், 94440 42322 என்ற 'வாட்ஸாப்' எண்ணில் புகார் அளிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.