8 சவரன் தவறவிட்ட ரயில் பயணி ஒப்படைத்த பணியாளருக்கு பாராட்டு
சென்னை, கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு சதாப்தி விரைவு ரயில், கடந்த 29ம் தேதி இரவு வந்தது. இதில் பயணியர் இறங்கி சென்ற பின், பெட்டிகளை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். அப்போது, 'இ1' பெட்டியில் எண் 1ல் சிறிய கைப்பை இருந்ததை துாய்மை பணியாளர் கார்த்திக் என்பவர் கண்டெடுத்தார். அதை திறந்து பார்த்த போது, இரண்டு வளையல்கள், கம்மல், ஆரம், நெக்லஸ் ஆகிய ஆபரணங்கள் இருந்தன. இவற்றை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் அவர் ஒப்படைத்தார். இந்த ஆபரணங்களை தவறவிட்டவர் குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்தனர்.அவை, பல்லாவரம் 200 அடி சாலையில் உள்ள அகஸ்டஸ் பிளாக்கில் வசித்து வரும் ஸ்ரீகாந்த் என்பவருக்கு சொந்தமானது என, தெரிந்தது. ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பெங்களூரில் இருந்து சென்ட்ரலுக்கு சதாப்தி ரயிலில் பயணித்தபோது, 8 சவரன் நகைகள் அடங்கிய கைப்பையை மறந்து விட்டு வீடு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு சென்றடைந்து பின், பையை தவறவிட்டதை அறிந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசில் புகார் கொடுக்க வந்தனர். அப்போது, அவரிடம் விசாரித்த போது, ரயிலில் துாய்மைப் பணியின் போது கிடைத்த கைப்பைக்கு உரியவர் என்பது தெரிந்தது.இதையடுத்து, அவரிடம் நகைகளை ரயில்வே போலீசார் ஒப்படைந்தனர். துாய்மை பணியாளர் கார்த்திக்கின் நேர்மையை ரயில்வே போலீசார், பயணி ஸ்ரீகாந்த் ஆகியோர் பாராட்டினர்.