மொரீஷியசை சேர்ந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு
சென்னை : மொரீஷியஸ் நாட்டில் இருந்து, 'ஏர் மொரீஷியஸ்' பயணியர் விமானம், 320 பேருடன் நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு வந்தது.அதில், மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த மோனிஸ் குமார், 37, பூஜா, 32 தம்பதி, தங்களது எட்டு நாள் பெண் குழந்தையுடன், சென்னை வந்தனர்.அந்த நாட்டில், கடந்த 26ம் தேதி பிறந்த குழந்தைக்கு, இதயத்தில் இருந்த பிரச்னைக்கு சிகிச்சையளிக்க, நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மருத்துவ உதவியாளர் ஒருவரின் துணையுடன் வந்தனர்.இந்த விமானம் நடுவானில் பறந்தபோது, குழந்தையின் உடல்நிலை மோசமானது. உடனே, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் தெரிவித்தார். மருத்துவ குழுவினர் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, விமானம் சென்னையில் தரையிறங்கியதும், விமான நிலைய மருத்துவக் குழுவினர், விமானத்துக்குள் ஏறி குழந்தையை பரிசோதித்தனர். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது.இதை அறிந்ததும், குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். அவர்களுக்கு, சக பயணியரும் விமான ஊழியர்களும் ஆறுதல் கூறினர்.