வசிக்காத இடத்தில் 900 வாக்காளர்கள் மயிலாப்பூர் தொகுதியில் அதிர்ச்சி
சென்னை: மயிலாப்பூர் தொகுதியில், ஆக்கிரமிப்புகளை காலி செய்து இரண்டு ஆண்டுகளான நிலையில், அங்கிருந்த 900 வாக்காளர்களின் பெயரை நீக்காததுடன், இடம் பெயர்ந்த முகவரியில் மீண்டும் பெயர் சேர்க்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மயிலாப்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, அடையாறு மண்டலம், 171வது வார்டு, கோவிந்தசாமி நகரில், பகிங்ஹாம் கால்வாய் ஓரம் வசித்த, 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 2023ம் ஆண்டு, அதே தொகுதிக்கு உட்பட்ட, தேனாம்பேட்டை மண்டலம், 122 மற்றும் 126வது வார்டில், மாற்று வீடு வழங்கி மறுகுடியமர்வு செய்யப்பட்டன. இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணியின்போது, கோவிந்தசாமி நகரில் இருந்த வாக்காளர்கள் பெயரை நீக்கிவிட்டு, மாற்று வீடு பெற்ற முகவரியில் பெயரை சேர்த்திருக்க வேண்டும். ஆனால், கோவிந்தசாமி நகரில் இருந்த, 900 வாக்காளர்கள் பெயர் நீக்கப்படவில்லை. வரைவு வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் உள்ளன. மேலும், வாக்காளர்கள் இல்லாத அந்த பகுதிக்கு, இரண்டு ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் கூறியதாவது: கோவிந்தசாமி நகர் இடம், தற்போது காலியாக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் இருந்த வாக்காளர்கள் பெயரை நீக்கிவிட்டு, புதிதாக குடியேறிய முகவரியில் சேர்த்திருக்க வேண்டும். அங்கும் படிவம் - 6 வழங்கி பெயரை சேர்க்க முயற்சி நடக்கிறது. இரண்டு இடத்தில் ஓட்டுப்போட வைக்கலாம் என, தி.மு.க.,வினர் கொடுத்த அழுத்தத்தில், கோவிந்தசாமி நகரில் வசித்த வாக்காளர்களின் பெயரை, அதிகாரிகள் நீக்கவில்லை என தெரிகிறது. ஒரு வாக்காளர், ஒரு இடத்தில் மட்டும் தான் ஓட்டு போட வேண்டும் என்ற நோக்கத்தில், எஸ்.ஐ.ஆர்., பணி நடந்தது. அதை பொய்யாக்கும் விதமாக, இந்த செயல் உள்ளது. ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் உள்ள வாக்காளர்கள் பெயரை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அகரம்மேல் ஊராட்சியில் சலசலப்பு பூந்தமல்லி நகராட்சி, அகரம்மேல் ஊராட்சியில் உள்ள 449 முதல் 452 வரை உள்ள நான்கு ஓட்டுச்சாவடிகளில், 3,839 ஓட்டுகள் இருப்பதாக பட்டியல் வெளியானது. இதில்,100க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் பெயர்கள், பட்டியலில் நீக்கப்படாமல் உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி சரியாக கணக்கெடுக்கவில்லை. பழைய பட்டியலில் இருந்த பெயர்கள் அப்படியே வெளியாகி உள்ளது. வீட்டில் ஆட்கள் இல்லாத நிலையில் அலுவலர்களே விண்ணப்பங்களை பூர்த்தி செய்ததால், இந்த தவறு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதேபோல், கொரட்டூர், காமராஜ் நகர் ஒன்பதாவது தெருவைச் சேர்ந்தவர் ஹரிஷ் சுல்தான், 45. இவரது தந்தை அஸ்ரப் அலி, 73. கடந்த ஆக., மாதம் 14ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால், வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.