ஒரே நாளில் வழிப்பறி, திருட்டு அடாவடி செய்தவர் கைது
அசோக் நகர்: அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேரன், 21. இவர், அசோக் நகர், 7வது அவென்யூ பகுதியில், தள்ளுவண்டி கடையில் பணிபுரிகிறார்.நான்கு நாட்களுக்கு முன், சேரன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த நபர், ஐந்து பரோட்டா வாங்கி, பணம் தராமல் மிரட்டியதோடு, கல்லாவில் இருந்த 700 ரூபாயை எடுத்து சென்றார்.இது குறித்து, சேரன் அளித்த புகாரின்படி, அசோக் நகர் போலீசார் விசாரித்தனர். இதில், அசோக் நகர், புதுார் நகரைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 25, என்பது தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். விசாரணையில் மேலும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தெரிய வந்தன.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:பரோட்டா கடையில் பணத்தை திருடிய விக்னேஷ்வரன், பின் அதே பகுதியில் உள்ள பாலகிருஷ்ணா தெருவில் ஸ்கூட்டியில் வந்த நபரை மறித்துள்ளார். கத்தியைக் காட்டி அவரை துரத்தி, ஸ்கூட்டியை அபகரித்துள்ளார்.பரோட்டா கடையில் எடுத்த 700 ரூபாயுடன், ஸ்கூட்டியில் 'டாஸ்மாக்' கடை சென்றுள்ளார். அங்கு மது அருந்தி, போதையில் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார். ஒருவழியாக வீட்டிற்கு சென்று, ஸ்கூட்டியை நிறுத்தியுள்ளார்.பின், போதையில் தள்ளாடியபடி, அசோக் நகர் 9வது அவென்யூவிற்கு சென்றுள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த 'பஜாஜ் பல்சர்' பைக்கின் பூட்டை உடைத்து, அங்கிருந்து ஜாலியாக உலா வந்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இரண்டு இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், விக்னேஸ்வரன் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.ஐஸ் விற்ற சிறுவனை தாக்கி வழிப்பறிதண்டையார்பேட்டை வாலிபர்கள் கைதுஉத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர், தண்டையார்பேட்டையில் தங்கி, சைக்கிளில் குல்பி ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த 14ம் தேதி இரவு, கொருக்குப்பேட்டை, ஐ.ஓ.சி., பேருந்து நிலையம் அருகே சைக்கிளில் குல்பி ஐஸ் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த மூவர், சிறுவனிடம் பணம் கொடுக்காமல் குல்பி ஐஸ் கேட்டுள்ளனர்.சிறுவன் மறுக்கவே, ஆத்திரமடைந்த மூவரும் சைக்கிளில் இருந்த பித்தளை மணியால், சிறுவனின் தலையில் தாக்கி, பாக்கெட்டில் இருந்த 100 ரூபாய் மற்றும் பித்தளை மணியை பறித்து சென்றனர்.இது குறித்து, ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்தனர். இதில், தண்டையார்பேட்டை, கோவிந்தசாமி தெருவை ராஜேஷ், 25, பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த சூர்யா, 21, எம்.ஜி.ஆர்.நகர் முதல் தெருவைச் சேர்ந்த சிவா, 19, என்பது தெரிய வந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.