உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேனாம்பேட்டை மேம்பாலத்தின் ஒரு பகுதி ஹைதராபாத் நிறுவனத்திடம் ஒப்படைப்பு

தேனாம்பேட்டை மேம்பாலத்தின் ஒரு பகுதி ஹைதராபாத் நிறுவனத்திடம் ஒப்படைப்பு

சென்னை :தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலத்தில் ஓடுதளத்தை தாங்கும் கட்டமைப்புகளை உருவாக்கும் பணி, ஹைதராபாதில் உள்ள நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டு உள்ளது. அண்ணா சாலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3.20 கி.மீ.,க்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. நாட்டிலேயே முதல் முறையாக, மெட்ரோ ரயில் சுரங்கத்திற்கு மேல் நவீன தொழில்நுட்பத்துடன் இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது. துாண்கள் மற்றும் ஓடுதளத்தை தாங்கும் கட்டமைப்பை இரும்பை பயன்படுத்தியும், ஓடுதள கட்டமைப்பு முன்வார்ப்பு செய்யப்பட்ட கான்கிரீட் பயன்படுத்தியும் அமைக்கப்படுகிறது. துாண்கள் தயாரிக்கும் பணிகள், குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேம்பாலத்தை, ஜனவரி மாதத்திற்குள் போக்குவரத்துக்கு திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடிப்பதற்காக, ஓடுதளத்தை தாங்கும் கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டு உள்ளது. இப்பணிகளை, ஹைதராபாதில் உள்ள தொழிற்சாலைக்கு சென்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, செயலர் செல்வராஜ், முதன்மை பொறியாளர் சத்திய பிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் சரவண செல்வம் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு கூறுகையில், ''மேம்பால கட்டுமானத்திற்கு மொத்தம் 15,000 டன் இரும்பு பயன்படுத்தப்படவுள்ளது. ஹைதராபாதில் உள்ள தொழிற்சாலையில் மட்டும் 3,400 டன் இரும்பை பயன்படுத்தி கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளது. முன்தயாரிப்பு கட்டுமானங்கள் தயாரான பின், கனரக டிரெய்லர் வாகனங்களில் அவை எடுத்துவரப்பட்டு, மேம்பால பணிக்கு பயன்படுத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை