ஏ பாசிட்டிவ் தந்தையின் சிறுநீரகம் ஓ பாசிட்டிவ் மகனுக்கு பொருத்தம்
சென்னை :இணக்கமற்ற ரத்த வகையை சார்ந்த தந்தை அளித்த சிறுநீரக தானத்தால், 28 வயது மகனுக்கு, எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவமனையின் தலைவர் சத்தியநாராயணன் கூறியதாவது: சென்னையைச் சேர்ந்த 28 வயது நபருக்கு, சிறுநீரகவாதம் என்ற நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நோயால், உடலின் நோய் எதிர்ப்பு திறன், தவறுதலாக சிறுநீரகத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. மரபணு காரணமாக ஏற்பட்ட இந்நோயால், சிறுநீரகம் செயலிழந்தது. இதனால், மூன்று ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டது. நோயாளி 'ஓ பாசிட்டிவ்' ரத்த வகையைச் சேர்ந்தவர். அந்தவகை ரத்தம் உடைய கொடையாளி கிடைக்காத நிலையில், 'ஏ பாசிட்டிவ்' ரத்த வகை உடைய அவரது தந்தையின் சிறுநீரகம் பொருத்த திட்டமிடப்பட்டது. இணக்கமற்ற ரத்த வகை என்பதால், அந்த சிறுநீரகத்தை உடல் ஏற்று கொள்ளாத நிலை ஏற்படும். சிறுநீரகத்தை உடல் நிராகரிக்கும் அபாயத்தை குறைக்க, 'இம்யூனோஅட்சார்ப்ஷன்' என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், சிறுநீரகவியல் நிபுணர் மாத்யூ ஜெர்ரி ஜார்ஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது நோயாளி நலமுடன் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.