கழிவுநீர் குழாய் உடைப்பால் நெசப்பாக்கத்தில் பள்ளம்
நெசப்பாக்கம், கோடம்பாக்கம் மண்டலம், 137வது வார்டு, அண்ணா பிரதான சாலையில் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.இங்கு சுத்திகரிக்கப்படும் கழிவுநீர், குழாய் வாயிலாக, நெசப்பாக்கம் இணைப்பு சாலை, ஏரிக்கரை சாலை வழியாக போரூர் ஏரிக்கு செல்கிறது.இந்த குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, அண்ணா பிரதான சாலை மற்றும் இணைப்பு சாலை சந்திப்பில், நேற்று காலை, 8 அடி ஆழத்திற்கு 3 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.தகவலறிந்து வந்த குடிநீர் வாரிய ஊழியர்கள், விபத்து நிகழாமல் இருக்க, அப்பள்ளத்தைச் சுற்றி, தடுப்புகள் அமைத்தனர். பின், உடைந்த குழாயை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அண்ணா பிரதான சாலையில், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பள்ளம் விழுவது அடிக்கடி நடக்கிறது.