மின்மாற்றி வெடித்து சிதறி விபத்து வாக்கிங் சென்றவர் படுகாயம்
திருவொற்றியூர்,மின்மாற்றி வெடித்து சிதறியதில், நடைபயிற்சி சென்ற தனியார் ஊழியர், பலத்த தீக்காயமடைந்தார். திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்தவர் நடராஜன், 53; தனியார் நிறுவன ஊழியர். நேற்று அதிகாலை, தேரடி தெற்கு மாடவீதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, எம்.எஸ்.எம்., திரையரங்கம் எதிரே நடந்து சென்றபோது, அங்கிருந்த மின்மாற்றி திடீரென வெடித்து சிதறி, தீப்பொறிகள் சாலையில் விழுந்தன. அப்போது, மின்மாற்றியில் நிரப்பப்பட்டிருந்த ஆயில், தீப்பிழப்புடன் சாலையில் சிதறியது. இதில், நடராஜன் பலத்த தீக்காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, திருவொற்றியூர் சுகம் மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், காகம் ஒன்று இரும்பு கம்பியை, மின்மாற்றியின் மீது எடுத்து வந்து போட்டதால், விபரீதம் நடந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ***