உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடையாறு எல்.பி., சாலை விரிவாக்கம் அரசியல் கட்சியினரால் முட்டுக்கட்டை 20 ஆண்டுகளாக தொடரும் இழுபறி

அடையாறு எல்.பி., சாலை விரிவாக்கம் அரசியல் கட்சியினரால் முட்டுக்கட்டை 20 ஆண்டுகளாக தொடரும் இழுபறி

அடையாறு அடையாறு, எல்.பி., சாலை 2.8 கி.மீ., துாரம் கொண்டது. பாரிமுனை, மந்தைவெளி, அண்ணா சாலை, கிண்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து, திருவான்மியூர் மற்றும் இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பகுதிக்கு, எல்.பி., சாலை வழியாக செல்கின்றனர்.மேலும், பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், திருவான்மியூர், அடையாறு சுற்றுவட்டார பகுதிவாசிகளும், எல்.பி., சாலை வழியாகத் தான், இதர பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.இதனால், இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். 30 முதல் 40 அடி அகலமாக இருந்த இந்த சாலையை, 100 அடி அகலமாக மாற்ற, 1980ம் ஆண்டு அரசு திட்டமிட்டது.அதன்பின், 2000ம் ஆண்டு முதல் கட்டிய கட்டடங்களுக்கு, 100 அடி அகலம் வரும் வகையில், இடம் விட வலியுறுத்தப்பட்டது.அதன்படி, 30, 40 மற்றும் சில பகுதிகளில் 100 அடி அகலம் வீதம் உள்ளது. மொத்தமுள்ள, 2.8 கி.மீ., துாரத்தையும் 100 அடி அகலமாக மாற்ற, 2012, 2017 ஆகிய ஆண்டுகளில், மாநகராட்சி திட்டமிட்டது.சில இடங்களில், ஆக்கிரமிப்பு மற்றும் நில ஆர்ஜித இடம் உள்ளதால், அரசியல் தலையீடு காரணமாக விரிவாக்கப் பணி கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி மீண்டும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டது.இந்த சாலை வழியாக, மெட்ரோ ரயில் பணி மற்றும் அடையாறு மேம்பாலத்தில் எல்.பி., சாலை செல்லும் வழித்தடத்தில் மாற்றம் போன்ற காரணங்களால், சாலை விரிவாக்கம் மீண்டும் கிடப்பில் உள்ளது.மெட்ரோ ரயில் பணிக்காக, எல்.பி., சாலையில் சில இடங்கள் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டன. அதேபோல், சாலையையும் நில ஆர்ஜிதம் செய்து, 100 அடி அகலமாக மாற்ற வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆனால், மெட்ரோ ரயில் பணி முடிந்த பின் தான், சாலை விரிவாக்கம் செய்யும் முடிவில் மாநகராட்சி உள்ளதால், இன்னும் சில ஆண்டுகள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, அடையாறு சுற்றுவட்டார பகுதிவாசிகள் கூறியதாவது:பல்வேறு பகுதிகளில் இருந்து, இ.சி.ஆர்., செல்ல முக்கிய வழித்தடமாக, எல்.பி., சாலை உள்ளது. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம்.எம்.பி., - எம்.எல்.ஏ., கவுன்சிலர்களும், 'நான் ஜெயித்தால் உடனே எல்.பி., சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பேன்' என, ஓட்டு கேட்டனர். 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், மக்கள் பிரதிநிதிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சிலர், அதிகாரிகள் செயலுக்கு மறைமுக தடை போட்டு, விரிவாக்கத்திற்கு முட்டுக்கட்டை செய்துள்ளனர். மெட்ரோ ரயில் பணியுடன் சேர்த்து, சாலை விரிவாக்கத்தையும் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:எல்.பி., சாலையை விரிவாக்கம் செய்தால், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பகுதிக்கு எளிதாக செல்ல முடியும். நில ஆர்ஜிதம் செய்து சாலையை விரிவாக்கம் செய்ய தயாராக உள்ளோம்.ஆனால், சிலர் வழக்கு தொடுத்துள்ளனர். சில இடங்களை மீட்பதில் அரசியல் தலையீடு உள்ளது. மெட்ரோ ரயில் பணி செய்யும்போது, சாலை விரிவாக்கத்தையும் சேர்த்து செய்வது எளிது. அதற்கு மேல், அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை