துாத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய கும்பலை திருச்சியில் மடக்கிய அடையாறு போலீஸ்
அடையாறு, ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக, துாத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய கும்பலை, திருச்சியில் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து, 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக, துாத்துக்குடிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று, கிண்டியில், 25 கிலோ கஞ்சாவுடன் நின்ற இசக்கிராஜா, 26, என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாகவும், 25 கிலோ கஞ்சாவுடன், மூன்று பேர் துாத்துக்குடி நோக்கி காரில் செல்வதாகவும் கூறினார். அவர் கூறிய கார் எண்ணை வைத்து, தனிப்படை போலீசார் பின் தொடர்ந்து, திருச்சியில் காரை மடக்கினர். காரில் இருந்த ஜெபஸ்டின், 26, தளவாய்மதன், 27, ஆகியோரை பிடித்தனர். இசக்கிமுத்து, 28, என்பவர் தப்பி ஓடினார். காரில் இருந்த 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கார் எண் குறித்து ஆய்வு செய்தபோது, அது போலியானது என தெரிந்தது. உண்மையான எண்ணை வைத்து விசாரித்த போது, நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான வாடகை கார் என தெரிந்தது. போலி எண் பலகையை பயன்படுத்தி, ஆந்திரா சென்று கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இசக்கிராஜா, ஜெபஸ்டின், தளவாய்மதன் ஆகியோரை கைது செய்த போலீசார், கார் மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர்.