எளிய பெண்ணின் வாழ்க்கையை பேசிய அக்னி பிரவேசம் நாடகம்
சென்னை:'கலை இளமணி' ஸ்ருதி நாட்டிய நாத நாடக சங்கமம் தயாரிப்பில், காரைக்குடி நாராயணனின் கதை மற்றும் எழுத்தில், 'அக்னி பிரவேசம்' நாடகம், தி.நகர் வாணி மஹாலில் நடந்தது.தன் அப்பா, தம்பி, தங்கை மற்றும் இறந்து போன கணவர் ஆகியோரே, தன் உலகம் என வாழ்ந்து வரும், 28 வயது ஆசிரியை ஜானகியை சுற்றியே கதை நகர்கிறது.இளம் வயதில் கணவனை இழந்தவளின் மன உறுதியையும், குடும்ப பாரத்தையும் சுமப்பவளாக தன் கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டு நாடகத்தை இயற்றியவர், ஜானகியாக நடித்த, பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ்.மனோகரின் பேத்தி ஸ்ருதி.இந்த சூழலில், வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த சிறுவன், தன் தந்தையுடன் திருச்சி வருகிறான். துாங்கும்போது, 'ஜானு... ஜானு' என முணுமுணுக்கிறான்; ஜானகியின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் உச்சரிக்கிறான். ஜானகியின் இறந்து போன கணவனின் மறு பிறவி தான், அந்த எட்டு வயது சிறுவன் என, தெரிய வருகிறது.முற்பிறவியில் ஏழையாக இருந்த ஜானகியின் கணவன், தற்போது கோடீஸ்வரனாக சிறுவன் ரூபத்தில் மறு பிறவி எடுத்து, தன் மனைவிக்கு இருந்த கடன், கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறான்.திடீரென சிறுவனுக்கு, முற்பிறவி ஞாபகம் மறந்து விடுவதோடு, அவளை பிரிந்து வெளிநாடு செல்கிறான். இறுதியில், ஜானகி 'அக்னி பிரவேசம்' செய்கிறாள்.ஜானகியின் அப்பா சங்கர் அய்யர் கதாபாத்திரத்தில் டாக்டர் சிவபிரசாத் நடித்துள்ளார். திலீப் எனும் சிறுவன் கதாபாத்திரத்தில் பரம்வீர் சிங், நாராயணனாக ஸ்வரூப், வர்கீசாக மூர்த்தி, முத்துராஜாவாக தனுஷ் சக்கரவர்த்தி, சிவராமனாக சேஷாத்ரி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை மெருகேற்றினர்.