கார் வாங்கி தருவதாக ரூ.2.46 கோடி அ.தி.மு.க., பிரமுகரிடம் நுாதன மோசடி
சென்னை'நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அபிஷேக், 35; அ.தி.மு.க., இளைஞர் அணி மாவட்ட செயலர். இவருக்கு, அரும்பாக்கத்தைச் சேர்ந்த சகோதரர்கள், ரோஹித்குமார், ரோஷன் ஆனந்த் ஆகியோர் பழக்கமாகி உள்ளனர்.சொகுசு கார் வாங்கி தருவதாக கூறி, 2017ல் இருந்து பல தவணைகளில், வங்கி கணக்கு வாயிலாக, 2.46 கோடி ரூபாயை, அபிஷேக்கிடம் வாங்கி உள்ளனர்.கடந்த 2021ல், புதுடில்லியில் உள்ள ஷோரூமில், ரோஹித்குமார் பெயரில், மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கி உள்ளனர். அந்த காரை, அபிஷேக்கிடம் கொடுத்துள்ளனர்.ஆனால், அபிஷேக் கொடுத்த பணத்தில் கார் வாங்காமல், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில், 1.45 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி காரை வாங்கி கொடுத்துள்ளனர். அதற்கு சில மாதங்கள் மட்டுமே தவணை செலுத்தி உள்ளனர். அதன் பின் தவணை தொகை செலுத்தாததால், தனியார் வங்கி அதிகாரிகள், ரோஹித்குமாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.இதனால் அவர், தன் காரை அபிஷேக் பயன்படுத்தி வருகிறார். அந்த காரை தர மறுக்கிறார் என, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இது தொடர்பாக அபிஷேக்கிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, ரோஷன் ஆனந்த், ரோஹித்குமார் ஆகியோரிடம் பணம் கொடுத்து கார் வாங்கியதற்கான ஆவணங்களை, அபிஷேக் சமர்ப்பித்துள்ளார்.மேலும், அவர்கள் தான் தன்னை ஏமாற்றியதாகவும், மோசடி செய்த அந்த சகோதரர்கள் மீது எடுக்க கோரியும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.இப்புகார் குறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து, ரோஹித்குமார் மற்றும் ரோஷன் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.