பெண்களுக்கு பாதுகாப்பில்லை அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
பெருங்களத்துார் தி.மு.க., அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், பெருங்களத்துாரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அதில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது:வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விற்கு பாடம் கற்றுக்கொடுத்தால் தான், தி.மு.க., வீட்டிற்கு போகும். அ.தி.மு.க., கோட்டைக்கு செல்லும். மக்கள் எதிர்பார்க்கும் அரசு என்றால், அது அ.தி.மு.க., அரசு தான்.ஜெயலலிதா ஆட்சியில், இரவு 12:00 மணிக்கு கூட பெண்கள் சுதந்திரமாக செல்ல முடிந்தது. தற்போது, இ.சி.ஆர்., சாலையில் காரில் சென்ற பெண்களை, தி.மு.க., கொடி கட்டிய காரில் வந்தவர்கள் மிரட்டியுள்ளனர்.பெண் காவலருக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல், தமிழகத்தில் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒரே நாளில், 18 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதை பொருட்களும், சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.கோபாலபுரம் குடும்பம், தமிழகத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறது என்றால், தாம்பரத்தை எம்.எல்.ஏ., குடும்பம் சூறையாடிக்கொண்டிருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.