மின்சார பிரச்னைகள் அதிகரிப்பு ஆலந்துார் கவுன்சிலர்கள் கொதிப்பு
ஆலந்துார், ஆலந்துார் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், கவுன்சிலர்கள் மற்றும் பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், சமீபத்திய மழையில், சீரமைப்பு பணிகளில் மாநகராட்சி அலுவலர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றியதாக, அனைத்து கவுன்சிலர்களும் பாராட்டினர்.இதையடுத்து, கவுன்சிலர்கள் பேசியதாவது:ஆதம்பாக்கம், நியூகாலனி காலிமனையில் குப்பை கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மணப்பாக்கத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ஆண்டுதோறும் ஒதுக்கப்படும், 10 லட்சம் ரூபாயை, விரைந்து ஒதுக்க வேண்டும்.குடிநீர் குழாய்களில், பல இடங்களில் கசிவு ஏற்பட்டு வருகிறது. உடனடியாக சரி செய்ய வேண்டும். முகலிவாக்கத்தில் 'மில்லிங்' செய்யப்பட்ட சாலைகள், உடனடியாக சீரமைக்க வேண்டும். நங்கநல்லுாரில் 'அம்மா' உணவகத்தில் தரமான, சுவையான உணவு அளிப்பதில்லை. நந்தம்பாக்கத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் தினமும் இரவில் சில மணி நேரம் மின் தடையால் மக்கள் உறக்கமின்றி தவிக்கின்றனர். ஆறு மின்கம்பங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.இவ்வாறு கோரிக்கை வைத்தனர்.கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் மின் வாரியம் சார்பில் எந்த அலுவலரும் பங்கேற்காததால், 'நோட்டீஸ்' வழங்க உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில், 18 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.