ஜல்லடியன்பேட்டையில் ரூ.3 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் அமைகிறது
ஜல்லடியன் பேட்டை, ஜல்லடியன்பேட்டையில், மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான, பல வசதிகளுடன் கூடிய உள் விளையாட்டு அரங்கம் அமையவுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி கூறியாதாவது: பெருங்குடி மண்டலம், வார்டு 191, ஜல்லடியன்பேட்டை, புது நகர் 5வது தெருவில், மாநகராட்சி 'கேப்பிடல்' நிதியின் கீழ், 3 கோடி ரூபாயில், 72 சென்ட் இடத்தில், விளையாட்டு அரங்கம் மற்றும் பொழுதுபோக்கு தளம் அமையவுள்ளது. இதில், 670 சதுர மீட்டரில், கூடைப்பந்து, 3 இறகுப்பந்து மைதானங்களுடன், டேபிள் டென்னிஸ், சதுரங்கம், கேரம் ஆகிய விளையாட்டு அரங்குகளுடன் கூடிய உள் விளையாட்டு அரங்கம் அமையவுள்ளது. தவிர, 2,660 சதுர மீட்டரில், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், பொழுதுபோக்கு இடம், கைப்பந்து மைதானம், குழந்தைகள் விளையாட்டு திடல் போன்றவையும், கழிப்பறை வசதியுடன் அமையவுள்ளன. இதற்கான தீர்மானம் மண்டல குழுவில் நிறைவேற்றப்பட்டு, மாநகராட்சியின் ஒப்புதல் பெறப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.