அனகாபுத்துார் பாண்டியன் தெருவில் தேங்கும் மழை வெள்ளத்தால் அவதி
அனகாபுத்துார்: அனகாபுத்துார், பாண்டியன் தெருவில், தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் சரி வர துார் வாராததால், நீர்வரத்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் மற்றும் கழிவுநீர் தனியார் இடத்தில் பாய்கிறது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீர்வரத்து கால்வாய்கள் துார் வாரப்பட்டன. கனரக இயந்திரங்கள் வாயிலாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. துார் வாரியதால் சேர்ந்த கழிவுகள், கால்வாயின் ஓரங்களில் போடப்பட்டன. அடுத்து பெய்த மழையில், அந்த கழிவுகள் மீண்டும் கால்வாய்க்குள் விழுந்ததால், பருவமழை முன்னெச்சரிக்கை பணி சொதப்பல் ஆனது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால், பாண்டியன் தெருவில், பாண்டியன் பிளாட்ஸ் எதிர்ப்புறம் கழிவுநீர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர், வெளியேற வழியில்லாமல், தெருவில் பாய்கிறது. இதனால், அந்த தெருவில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் மக்கள், மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, அடைப்பை சரி செய்து, மழைநீர் எளிதாக செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள், தாம்பரம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.