உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீன்கள் செத்து மிதந்த விவகாரத்தில் மீனவர்கள் ஆவேசம்! ஆய்வறிக்கை கேட்டு மீன்வள அலுவலகம் முற்றுகை

மீன்கள் செத்து மிதந்த விவகாரத்தில் மீனவர்கள் ஆவேசம்! ஆய்வறிக்கை கேட்டு மீன்வள அலுவலகம் முற்றுகை

எண்ணுார்: கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைக்கோரி, எண்ணுார் மீனவர்கள் நேற்று, மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆற்றில் பிடிக்கப்படும் எண்ணுார் மீன்களை யாரும் வாங்க முன்வராததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அவர்கள் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் பகிங்ஹாம் கால்வாயை அடைப்போம் என, அவர்கள் எச்சரித்துள்ளனர். சென்னை, எண்ணுார் - முகத்துவாரம் மற்றும் கொசஸ்தலை ஆற்றில், ஆக., 15 ம் தேதி, 2,150 கிலோ எடையிலான மடுவை, காரப்பொடி, கிழங்கான் உள்ளிட்ட மீன்கள், கொத்து கொத்தாக இறந்து மிதந்தன. தொழிற்சாலை மற்றும் அனல்மின் நிலைய ரசாயன கழிவுகளால், மீன்கள் இறந்ததாக கூறி, எட்டு கிராம மீனவர்கள், தாழங்குப்பம் சந்திப்பில், சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த, திருவொற்றியூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார், நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்தனர். இதற்கிடையில், சட்டசபையில் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ், 'மீன்கள் இறப்பிற்கு மனித கழிவு காரணமாக இருக்கலாம்' என்றார். இந்த கருத்து, மீனவ கிராம மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் கருத்தை கண்டித்து, தாழங்குப்பம் உட்பட எட்டு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், போராட்டம் நடத்த முடிவு செய்தனர். தகவலறிந்த போலீசார், ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அந்த போராட்டத்தை தள்ளிப்பேட வைத்தனர். இதற்கிடையில், சட்டசபை முடிவதற்குள் மீன்கள் இறப்பு விவகாரத்திற்கான காரணம் குறித்து அறிக்கை வெளியாகும் என, மீனவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சட்டசபையும் முடிந்துவிட்டது. இதனால், மீன்கள் இறப்பிற்கான ஆய்வு முடிவுகள் கோரியும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு இழப்பீடு கோரியும், காட்டுகுப்பம் உள்ளிட்ட எட்டு கிராம மீனவர்கள், எண்ணுாரில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அதன்படி, 300க்கும் அதிகமான மீனவர்கள் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து, கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது, 'கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்த விவகாரத்திற்கு பின், எண்ணுார் மீனை யாரும் வாங்க முன்வருவதில்லை. எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மனித கழிவு தான் காரணம் என்றால், பகிங்ஹாம் கால்வாயை அடைப்போம்' என, ஆவேசமாக பேசினர். அங்கு வந்த, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜான் பெக்கர், ''ஒரு வாரத்தில் ஆய்வு முடிவுகள் வெளியிட வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சமாதானம் செய்தார். பின், அவர்கள் கலைந்து சென்றனர். எம்.எல்.ஏ.,வை காணோம்! இதற்கு முன், மீனவ கிராம பிரச்னைகளில், தி.மு.க., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மக்களுடன் நிற்பர். ஆனால், த.வெ.க., - எம்.எல்.ஏ., மேலோட்டமாக கேட்டு, இரண்டு மணி நேரத்தில் பிரச்னை தீர்ந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார். சட்டசபையில், எண்ணுார் நிலைமையை எடுத்துரைக்காமல், பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால்தான் மீன்கள் இறந்துள்ளன. எண்ணுார் மீன் வேண்டாம் என, எங்களை அசிங்கப்படுத்துகின்றனர். இவ்வளவு பெரிய போராட்டம் நடக்கிறது; எம்.எல்.ஏ.,வை காணவில்லை. வாழ்வாதாரத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டும். -எஸ்.சுபாஷ், 20, காட்டுக்குப்பம், எண்ணுார். நிரந்தர தீர்வு வேண்டும் எண்ணுார் முகத்துவாரத்தில் மீன்கள் இறப்பு தொடர்கதையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். எண்ணுார் மீனுக்கு மவுசு இருக்கும். ஆனால் தற்போது, எண்ணுார் மீன்களை வாங்க யாரும் முன்வருவதில்லை. உள்ளூர் மக்கள் கூட வாங்க தயங்குகின்றனர். ஒரு மாதமாக, எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கான 'மெர்க்' அமைப்பு தன் பணிகளை சரியாக செய்யவில்லை. தொழிற்சாலைகளை தொடர்ச்சியாக, அறிவியல் ரீதியான காரணங்கள் வேண்டும். எண்ணுார் மீன்களை பாதுகாப்பானதுதான்; சாப்பிடலாம் என்பது குறித்து, மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். - ஆர்.சுபாஷினி, 39, காட்டுக்குப்பம், எண்ணுார். கால்வாயில் செத்து மதிந்த 300 கிலோ மீன் கொரட்டூர் ஏரி 590 ஏக்கர் பரப்பளவு உடையது. ஏரியின் உபரி நீர், கால்வாய் வழியாக மாதவரத்திற்கு செல்கிறது. இந்நிலையில், குடிநீர் வாரியத்தின் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், இரு நாட்களுக்கு முன், புத்தகரம் பகுதியில் உள்ள மதகு மூடப்பட்டு, ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுவது தடைப்பட்டது. இதனால், நீரோட்டமில்லாததால் கால்வாயில் தேங்கிருந்த நீரில் ஆக்சிஜன் கிடைக்காமல், 300 கிலோவிற்கும் அதிகமான 'ஜிலேபி' வகை மீன்கள் இறந்து மிதந்தன. இதனால், அப்பகுதியில் அதிகபடியான துர்நாற்றம் வீசியது. தகவலறந்து வந்த சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள், கால்வாயில் இறங்கி, இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகளும் விசாரிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்