அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு பெண் இன்ஸ்பெக்டர் ராஜி சஸ்பெண்ட்
சென்னை:அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்முறை வழக்கில், உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில், குற்றம் சாட்டப்ப நபரின் பெயரை நீக்க, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜி பணம் வாங்கியது அம்பலமானதால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, கடந்தாண்டு செப்டம்பரில் பாலியல் வன்முறை செய்யப்பட்டார்.இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறுவன் மற்றும் வாலிபர் மீது, அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அப்போது, புகாரில் கூறப்பட்டுள்ள சிறுவனின் பெயரை நீக்குமாறு, இன்ஸ்பெக்டர் ராஜி வலியுறுத்தி உள்ளார். சிறுமியின் பெற்றோர் மறுத்ததால், அவர்களை, இன்ஸ்பெக்டர் கடுமையாக தாக்கி உள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டனர். அதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்த அட்டூழியங்களை வெளியில் கொண்டு வந்தனர்.இதையடுத்து, சிறுமி பாலியல் வன்முறை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து, போக்சோ வழக்கை விசாரித்தது. சிறுமியின் பெற்றோரும் வழக்கு தொடர்ந்தனர்.இவற்றை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் பாலியல் வன்முறை வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. தவறு செய்த பெண் இன்ஸ்பெக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வியும் எழுப்பி இருந்தது.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, மனு தாக்கல் செய்யப்பட்டது.அதேபோல், 'என் மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு எவருக்கும் நடக்கக்கூடாது. எங்களுக்கு நீதி வேண்டும்' என, சிறுமியின் பெற்றோரும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த இரு மனுக்களையும், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையின் போது, நீதிபதிகள், சிறுமியின் தாயிடம், இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தால், நான்கு ஐந்து ஆண்டுகள் ஆகலம். அதனால், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தனர்.மேலும், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பத்த சி.பி.ஐ., விசாரணைக்கான உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க, தமிழகத்தில் உள்ள, வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏழு ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.அதன் பின், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, டி.ஐ.ஜி., சரோஜ் தாக்கூர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அதில், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அய்மன் ஜமால், பிருந்தா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இக்குழுவினர், சிறுமியை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, 16 வயது சிறுவன் மற்றும் சதீஷ், 36, ஆகியோரை கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜி காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்டார்.இதையடுத்து, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, சென்னை, அண்ணா நகர் நடுவாங்கரையைச் சேர்ந்த, 103வது வட்டச் செயலர் சுதாகர், மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜிவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.இவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வரும், 21ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் பெயரை புகாரில் இருந்து நீக்க, சதீஷ் வாயிலாக இன்ஸ்பெக்டர் ராஜி லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியது தெரியவந்துள்ளது. இதனால் அவர், நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.