வங்கிகளில் பல கோடி ரூபாய் மோசடி மேலும் ஒருவர் சிக்கினார்
சென்னை,அமைந்தகரை, ஹெச்.டி.எப்.சி., வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் திவ்யன் குமார், 34. இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:'அவன்ஸ் கன்சல்டிங் சர்வீஸ்' என்ற நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருவதாக கூறி, போலியான ஊதியச் சான்றுகளை சமர்ப்பித்து, நான்கு பேர் தனி நபர் கடன் பெற்றனர். இவர்களுக்கு, ஆந்திராவைச் சேர்ந்த குமார் என்பவர் போலியாக ஊதியச் சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளார். இதன் வாயிலாக, 1.40 கோடி ரூபாய் தனி நபர் கடன் வாங்கி ஏமாற்றியுள்ளனர். அவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து, கடந்த மாதம் 23ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த குமார், 29, ஏகாம்பரம், 27, கேசவ் கங்கராஜ், 25, கிருஷ்ணமூர்த்தி, 24, ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.இதேபோல, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, பல்வேறு பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்று, 2.47 கோடி மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.போலி ஆவணங்கள் தயாரிப்பில் உடந்தையாக இருந்த, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், 32, என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார்.