ரூ.40 லட்சம் சம்பளத்தில் மழைக்கால பணியாளர்கள் நியமனம்
அடையாறு,அடையாறு மண்டலத்தில், 168 முதல் 180 வரை, 13 வார்டுகள் உள்ளன. இந்த மண்டலத்தில், பகிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆறு செல்கிறது.மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள, வார்டு பொறியாளர்களின் பங்கு முக்கியம். மழை பாதிப்பு, தேவைகள் உள்ளிட்டவற்றுக்கு, மேல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி பெற வேண்டும். தகவல்களையும் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். இதற்கு, 13 தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கவும், அவர்களுக்கு, 40.28 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள், மூன்று மாதம் பணியில் இருப்பர் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வாட்ஸாப் குழு
சோழிங்கநல்லுார் மண்டலத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கலந்தாய்வு கூட்டம், மண்டலக்குழு தலைவர் மதியழகன் தலைமையில் நடந்தது. இதில், நலச்சங்கங்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நலச்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: மாநகராட்சிக்கு வெளியே உள்ள 60க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், சோழிங்கநல்லுார் மண்டலம் வழியாக முட்டுக்காடு செல்கிறது. இதனால், துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். சில பகுதிகளில், வடிகால், சாலை முறையாக சீரமைக்கவில்லை. கடந்த ஆண்டு பருவமழை போல் இல்லாமல், தகவல்களை முன்கூட்டியே தர வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.இதற்கு, ''பருவமழைக்கு முன் எடுக்கும் அனைத்து நடவடிக்கையும், நலச்சங்கங்களுக்கு தெரிவிக்கப்படும். இதற்கு, அதிகாரிகள், நலச்சங்கங்களை ஒருங்கிணைத்து வாட்ஸாப் குழு உருவாக்கப்படும்,'' என, மண்டலக்குழு தலைவர் மதியழகன் பதில் கூறினார்.