மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பு அடுக்குமாடி குடியிருப்புகள் அட்டூழியம்
பெரும்பாக்கம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரும்பாக்கம். இது, நுாக்கம்பாளையம் - அரசன்கழனி சாலைக்கு முக்கிய இணைப்பு சாலை.இச்சாலையின் குறுக்கே, 15 அடி அகலமுள்ள திறந்தநிலை மழைநீர் போக்கு கால்வாய் அமைந்துள்ளது.இதில், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம் ஏரி உபரி நீர் கலந்து, சதுப்பு நிலத்தை அடைந்து, பகிங்ஹாம் கால்வாய் வாயிலாக கடலில் கலக்கிறது.இந்நிலையில், குறிப்பிட்ட சாலையின் இருபுறமுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளின், 500க்கும் மேற்பட்ட குடும்பங்களின் கழிவுநீர், மற்றும் மலக்கழிவுகளை நேரடியாக இக்கால்வாயில் கலக்கின்றனர்.இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீரை, மழைநீர் கால்வாயில் கலக்கின்றனர்.தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இச்சாலையில், திறந்தவெளியில் 24 மணி நேரமும் இந்த அட்டூழியம் தொடர்கிறது.இதுகுறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தும், அவர்கள் யாரும் இப்பிரச்னை குறித்து கண்டுகொள்வதில்லை.எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், கழிவுநீர் கலக்கும் குடியிருப்புகளின் மீது நடவடிக்கை எடுத்து, மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.