மாணவர்கள் மீது தாக்குதல்
கோயம்பேடு: கோயம்பேடு, சேமத்தம்மன் நகரைச் சேர்ந்த முருகன், 45 என்பவர் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. ஊர்வலத்தில் முருகனின் மகன் கார்த்திக் உடன் படிக்கும் 10ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்றனர். மரணமடைந்த முருகனை, அவரது மனைவி சரியாக பராமரிக்கவில்லை என, உறவினர்கள் சிலர் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு முருகனின் மகன் கார்த்திக் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மாணவர்களும் நின்றுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தை 'ஈ' சாலையில் ஊர்வலம் சென்றபோது, மாணவர்களுக்கும் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அங்கு மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் சில உறவினர்கள், மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள், வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடியுள்ளனர். இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.