கள்ளத்தொடர்பை போட்டு கொடுத்தவர் மீது தாக்குதல்
கீழ்ப்பாக்கம், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ், 32. இவர், எழும்பூர் தொகுதி த.வெ.க., நிர்வாகி. கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன், 32; ஆந்திராவில் சட்டப்படிப்பு படிக்கிறார். இருவரும் நண்பர்கள். சூரியபிரகாஷ், நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா அருகில் சென்றுள்ளார். அப்போது, விக்னேஷ்வரன், அவரது நண்பர்களான சந்தோஷ், தினேஷ், கார்த்திக் உள்ளிட்டோர் சூரியபிரகாஷை தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருமணமான விக்னேஷ்வரன், அவரது பெண் தோழியுடன் இ.சி.ஆர்., விடுதியில் தங்கி உள்ளார். இதை, சூர்யபிரகாஷ் புகைப்படம் எடுத்து, விக்னேஷ்வரனின் மனைவிக்கு அனுப்பியதால், சூரியபிரகாஷை தாக்கியது தெரிய வந்தது. இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.