ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சி: கொளத்துார் முதியவர் தற்கொலை
கொளத்துார்: கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்த வீட்டை ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற முயன்றதால், மன உளைச்சலில் இருந்த முதியவர், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். கொளத்துார், பாரத் ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 67. இவர், கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன், நீதிமன்ற உத்தரவின்படி, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், கடந்த 9ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலிறிந்த போலீசார், கிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்வதற்கு முன், கிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், 'நான் 40 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வந்தேன். இந்த இடத்தை விட்டு, வேறு எங்கும் சென்று வாழ விருப்பமில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.