உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி பள்ளிகளில் இரு மடங்கு சேர்க்கை அதிகரிப்பு மாணவர்களை ஈர்க்க அதிகாரிகள் தொடர் நடவடிக்கை

மாநகராட்சி பள்ளிகளில் இரு மடங்கு சேர்க்கை அதிகரிப்பு மாணவர்களை ஈர்க்க அதிகாரிகள் தொடர் நடவடிக்கை

சென்னை :சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025 - 26ம் கல்வியாண்டிற்கு இதுவரை, 15,618 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இது, கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகம் எனவும், இன்னும் அதிகரிக்கும் எனவும், மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி கல்வி துறையின் கீழ், 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலை பள்ளிகள் என, மொத்தம் 417 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025 - 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, மார்ச் மாதம் துவங்கியது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி தரப்பில் சிறப்பு கவனம் எடுக்கப்பட்டது.மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகள் குறித்தும், கல்வி தரம் மேம்பட்டிருப்பது குறித்தும், 45 ஆட்டோக்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று, பெற்றோரிடம் பேசி, மாணவர்களை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க ஊக்குவித்தனர்.அதன் பயனாக, கடந்தாண்டைவிட, இரண்டு மடங்கிற்கு மேல் மாணவர் சேர்க்கை நடந்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்தாண்டு, புதியதாக 6,000 மாணவர்கள் மட்டுமே சேர்ந்த நிலையில், இந்தாண்டில் இதுவரை, 15,618 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக யூ.கே.ஜி.,யில், 7,386 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது:மாநகராட்சியில் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்கவும், ஆங்கில மொழியை கற்பிக்கவும், தன்னார்வலர்கள் வாயிலாக, சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுவதுடன், அவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.இதன் பயனாக, இவ்வாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 86.10 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 81 சதவீதம், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 88.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டைவிட, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள், எழுதுப்பொருட்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கல்வி தரத்தை மேம்படுத்தவும், விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டி தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை கல்வி சுற்றுலாவுக்கும் அழைத்து செல்கிறோம். பல்வேறு சலுகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.தரமான கல்வி, கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் மாநகராட்சி பள்ளிகளில் உள்ளது. தேர்ச்சி விகிதமும் அதிகரித்து வருவதால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால், 15,618 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இன்னும் சேர்க்கை நடந்து வருவதால் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை