புயல் மழையை சமாளிக்க ஆவடி மாநகராட்சி தயார்
ஆவடி: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, ஆவடி மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை, 'மோந்தா' புயல் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, ஆவடி மாநகராட்சியில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆவடி மாநகராட்சி பொறுத்தவரை, ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அண்ணனுார் ஜோதி நகர், பலேரிப்பட்டு, பருத்திப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகள் என 9 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. தவிர, தாழ்வான, வெள்ளம் தேங்கும் இடங்களில் பொது மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, 10 இடங்களில் தற்காலிக நிவாரண மீட்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல, வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பிரச்னையை சமாளிக்க, 770 தற்காலிக துாய்மை பணியாளர்கள், 126 துாய்மை பணியாளர்கள், மூன்று சுகாதார அலுவலர்கள், 18 சுகாதார இன்ஸ்பெக்டர், 21 உதவி பொறியாளர்கள். எட்டு நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், இரண்டு உதவி செயற்பொறியாளர்கள், இரண்டு உதவி வருவாய் அலுவலர்கள், 13 பில் கலெக்டர்கள், ஏழு மேற்பார்வையாளர்கள், தவிர தனியார் ஒப்பந்த ஊழியர் 42 என 1,012 பேர் களத்தில் பணிபுரிய தயார் நிலையில் உள்ளனர்.