ஆவடி சார் -- பதிவாளர் ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு
ஆவடி:ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்ததை அடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.ஆவடி அடுத்த சேக்காடு, அண்ணா நகரில் ஆவடி சார் - பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பொறுப்பு சார் - பதிவாளராக சேட்டு என்பவர், கடந்த மூன்று மாதங்களாக பணிபுரிந்து வருகிறார்.வழக்கமாக, தினமும் பத்திரப்பதிவு செய்ய, 200 டோக்கன் மற்றும் தத்காலில், 50 டோக்கன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால், கூடுதலாக 50 பேர் பத்திரப்பதிவு செய்ய, அரசு அனுமதி அளித்திருந்தது.இதனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில், 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். அதேபோல், பதிவாளர் சேட்டு, ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று மாலை பத்திரப்பதிவு முடியும் நேரத்தில், சென்னை நந்தனத்தில் இருந்து வந்த டி.எஸ்.பி., பிரியதர்ஷினி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், ஷட்டரை அடைத்து, பதிவாளர் சேட்டிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதற்கிடையில், தாசில்தார் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகளை வரவழைத்து, போலியான ஆவணங்கள் எதுவும் பத்திரப்பதிவு நடந்துள்ளதா என்ற கோணங்களில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.