சாலையில் தேங்கும் கழிவு நீரால் அய்யப்பன் நகர் வாசிகள் அவதி
ஆவடி,ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் 9வது வார்டில், அய்யப்பன் நகர் மற்றும் அம்மன் அவென்யூவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 2019ல் சரஸ்வதி நகர் 11வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது..அங்கிருந்து வெளியேறும் தண்ணீர், வ.உ.சி., தெரு வழியாக, அய்யப்பன் நகரில் உள்ள காலி மனையில் தேங்கியது. இது குறித்து, அப்போதைய கவுன்சிலரிடம் பொதுமக்கள் கேட்ட போது, இந்த மழைநீர் வடிகால், அம்பத்துார் ஒரகடம் சர்ச் தெருவோடு இணைத்து, புழல் ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால், அந்த பணி இன்னும் கிடப்பில் உள்ளது.இந்நிலையில், மேற்கூறிய பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து மலம் கலந்த கழிவுநீர் வெளியேறி காலி நிலத்தில் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொசு உற்பத்தி அதிகரித்து, பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இரு மாதங்களுக்கு முன், சாலையோரத்தில் பள்ளம் தோண்டி மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் பெய்த மழையில், சாலை முழுதும் சகதியாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அவசர ஊர்தி மற்றும் தனியார் வாகனங்கள் உள்ளே வருவதில் சிக்கல் உள்ளது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், சாலையில் தேங்கும் கழிவு நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.