நாய்கள் சுற்றி வளைத்த மான் குட்டி பத்திரமாக மீட்பு
மணலி, மணலி அருகே, நாய்கள் சுற்றி வளைத்த மான் குட்டி மீட்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மணலி மண்டலம், 16வது வார்டு, சடையங்குப்பம் அடுத்த பர்மா நகர் பகுதியில் நேற்று சுற்றித் திரிந்த மான் குட்டியை, காகங்கள் மற்றும் நாய்கள் சூழ்ந்து கடிக்க முயன்றன. இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த வட மாநில தொழிலாளி அனில் பிரசாத், 45, அப்பகுதியினர் உதவியுடன் நாய்களை விரட்டி, மான் குட்டியை மீட்டார். இது குறித்து தகவலறிந்து வந்த செங்குன்றம் வனத்துறையினர், மானுக்கு ஏற்பட்ட சிறிய காயங்களுக்கு முதலுதவி சிகிச்சையளித்து, பத்திரமாக மீட்டு சென்றனர். பர்மா நகர் - மணலி புதுநகர் இடையே உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் விலங்குகள், அவ்வப்போது சடையங்குப்பம் மற்றும் மணலி விரைவு சாலைக்கு வருவது வழக்கமாக உள்ளது.