தண்டவாளம் தாண்டுவதை தடுக்க பரங்கிமலையில் தடுப்பு அமைப்பு
சென்னை,சென்னையில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்களில் செல்லும்போது, பயணியர் விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, முக்கிய வளைவுகளில், நடைமேடை அருகில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை ரயில் கோட்டத்தில், பரங்கிமலை, பூங்கா, வேப்பம்பட்டு, திருநின்றவூர், பட்டாபிராம், செவ்வாபேட்டை, புட்லுார், ஏகாட்டூர், செஞ்சிபனம் பாக்கம், மணவூர், மோசூர், புளியமங்கலம் ஆகிய, 12 ரயில் நிலையங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.தற்போது, ரயில் நிலையங்களில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் காரணமாக, இந்த சுவர்கள் நீக்கப்பட்டு பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பரங்கிமலை மற்றும் பூங்கா ரயில் நிலையத்தில், பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் இருந்து ரயில்கள் விரைவு பாதைகளில் செல்லும்போது, நடைமேடைகளில் இருக்கும், பயணியர் விரைவு ரயில்களில் சிக்கிவிடக் கூடாது; தவறி விழுந்திடக் கூடாது என்பதற்காக, பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, பரங்கிமலை, பூங்கா ரயில் நிலையங்களின் நடைமேடைகள் அருகில், பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அமைத்துள்ளோம். பயணியர் படியில் பயணம் செய்வதை தவிர்ப்பதோடு, பைகளை மாட்டிக் கொண்டு, படியில் செல்வதையாவது கட்டாயம் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.