போலீஸ் கமிஷனர் ஆபீசிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:சென்னை, வேப்பேரியில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்படுகிறது. அங்குள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.அப்போது, 'நான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து கட்டடம் சரிந்துவிடும். முடிந்தால் உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்' எனக் கூறிவிட்டு, தொடர்பை துண்டித்துள்ளார்.இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்படும் எட்டு மாடிகளிலும் சோதனை மேற்கொண்டனர். மர்ம பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என, தெரிய வந்தது.வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், வேப்பேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.