உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெடிகுண்டு மிரட்டல்கள் ஏதும் சீரியஸானது அல்ல 342 வழக்குகள் பதிவு: போலீஸ் கமிஷனர் அருண்

வெடிகுண்டு மிரட்டல்கள் ஏதும் சீரியஸானது அல்ல 342 வழக்குகள் பதிவு: போலீஸ் கமிஷனர் அருண்

சென்னை: ''சென்னையில் கடந்த ஆண்டைவிட, கொலைகள், செயின் பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக, 342 வழக்குகள் பதிவாகி உள்ளது. எதுவும் சீரியஸ் ஆனது அல்ல. எங்கிருந்து புகார் வந்தது என்று கண்டறிய முடியவில்லை,'' என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்தார். சென்னை போலீஸ் கமிஷனர் அருண், நேற்று அளித்த பேட்டி: சென்னையில் ஏப்ரல் முதல் தற்போது வரை, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக, 342 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் ஏதுவும், சீரியசாக எடுத்துக் கொள்ளும் நிலையில் இல்லை. இருப்பினும், அனைத்து துாதரகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளோம். இ-மெயில்கள், வி.பி.என்., பயன்படுத்தி அனுப்பப்படுவதால், எங்கு இருந்து அனுப்பப்படுகிறது என்பதை அறிய முடிவதில்லை; அதை கண்டறியும் தொழில்நுட்பமும் நம்மிடம் இல்லை. சென்னையில், 'பிங்' நிற ரோந்து வாகன திட்டம் வெற்றிகரமானதை அடுத்து, தமிழகம் முழுதும் அமலாகியுள்ளது. சென்னையை விட, ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் தான் அதிக அளவில் குட்கா பறிமுதல் செய்யப்படுகிறது. அங்கு தான் குடோன்களில் பதுக்கி வைக்கின்றனர்; சென்னைக்குள் அதுபோன்ற குடோன்கள் கிடையாது. ஆந்திராவில்தான் குட்கா பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அங்கு அவற்றை தயாரிக்கவோ, விற்கவோ தடையில்லை. இதனால், ஆந்திரா மாநிலத்திற்கு சென்று யாரையும் கைது செய்ய முடியாது. மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, சென்னையில் டிஜிட்டல் கைது என்பது மிகவும் குறைந்துள்ளது. சென்னையில், 4,979 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளனர். இவர்கள் யாரேனும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டால், நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் சேர்த்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏ.ஐ.,தொழில்நுட்பத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள், ஒப்பந்ததாரர்களை தாக்கி பேசி, 'யு டியூபர்கள்' அதிக அளவில் பணம் சம்பாதித்து வருகின்றனர். சென்னையில் கடந்தாண்டில், 102 கொலைகள் நடந்த நிலையில், இந்தாண்டு, 82 ஆகவும்; 35 ஆக இருந்த செயின் பறிப்பு, 21 ஆகவும்; 275 ஆக இருந்த மொபைல் போன் பறிப்பு, 144 ஆகவும் குறைந்துள்ளது. சில தினங்களுக்கு முன் பெண் காவலர் ஒருவர், 'ெஹல்மெட்' அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கிக் கொண்டார். அவரது மேல் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை