மேலும் செய்திகள்
தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: திணறும் போலீசார்
24-Sep-2025
சென்னை:சென்னையில் நேற்று ஒரே நாளில், ஒன்பது இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நடிகர் மற்றும் த.வெ.க., தலைவர் விஜய் வீடு, கமல் கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய பின், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என, போலீசார் தெரிவித்தனர். சென்னை, எழும்பூரில் உள்ள, மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை, 4:30 மணிக்கு மொபைல் போன் மூலம், மர்ம நபர் தொடர்பு கொண்டார். அவர், 'த.வெ.க., தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளோம். அவர் கன்னியாகுமரிக்கு மக்களை சந்திக்க வந்தால் உயிருடன் திரும்ப மாட்டார்' எனக்கூறி, தொடர்பை துண்டித்துவிட்டார். இது தொடர்பாக நீலாங்கரை போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் விஜயின் வீட்டில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு மிரட்டல் புரளி என, தெரியவந்தது. மிரட்டல் வந்த மொபைல் எண்கள் குறித்து போலீசார் விசாரித்தனர். அந்த எண், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சபீக், 37, என்பவர் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை மீனம்பாக்கத்தில் ஹோட்டல் மாஸ்டராக வேலை பார்த்து வந்த அவரை பிடித்து விசாரித்தனர். மது போதையில், மொபைல் போனில் 'ரீல்ஸ்' பார்த்தபோது, கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், 41 பேர் பலியானது பற்றிய செய்தி வந்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன் என, கூறியுள்ளார். இதையடுத்து சபீக்கை போலீசார் கைது செய்தனர். அதேபோல, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று வந்த இ - மெயிலில், மயிலாப்பூரில் உள்ள பிராமணர் சங்கம், ஆழ்வார்பேட்டையி ல் உள்ள நடிகர் கமலின் ம.நீ.ம., கட்சி அலுவலகம், அண்ணா சாலையில் உள்ள தி ஹிந்து பத்திரிக்கை அலுவலகம் மற்றும் ஹிந்து முன்னணி அலுவலகத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, அந்த இடங்களிலும் போலீசார் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மிரட்டல் புரளி என, தெரியவந்தது. தவிர, இ - மெயில் மூலம், சென்னை கே.கே.நகரில் உள்ள, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கும், கொட்டிவாக்கம், குன்றத்துார் அருகே வரதராஜபுரத்தில் உள்ள ஷ்ரத்தா சில்ரன்ஸ் அகாடமி எனும் தனியார் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அந்த இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதில் புரளி என, தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக, நீலாங்கரை, கே.கே.நகர், குன்றத்துார் உள்ளிட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் ஆசாமிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில், ஐந்து ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக, மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் வந்தது. இதையடுத்து, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்ற வளாகம், போக்சோ சிறப்பு நீதிமன்றம் என, உயர் நீதிமன்ற வளாகம் முழுதும் மோப்ப நாய் உதவுடன் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசாருடன் இணைந்து தீவிர சோதனை நடத்தினர். வளாகம் முழுதும் சோதனையில் ஈடுபட்ட போலீசார், நீதிமன்றத்தில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளையும் ஆய்வு செய்தனர். சோதனையில், எந்த வெடி பொருட்கள் ஏதும் இல்லை. சென்னையில் இரண்டு மாதங்களில், உயர் நீதிமன்றத்திற்கு ஆறாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
24-Sep-2025