அனுமதி மீறி கட்டிய கட்டடத்திற்கு சீல்
புழுதிவாக்கம், புழுதிவாக்கத்தில் அனுமதி மீறி கட்டிய கட்டடத்திற்கு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். பெருங்குடி மண்டலம், வார்டு 186க்கு உட்பட்ட புழுதிவாக்கம், கலைமகள் தெருவில், 2,500 ச.அடியில், இரு தளங்களில், ஏழு வீடுகளுடன், 'கணேஷ் பார்க்' என்ற குடியிருப்பு அமைந்துள்ளது. இதில், சிவசுப்ரமணியன் என்பவர், இரு வீடு வாங்கி குடியேறிய பின், இக்குடியிருப்பு ஐந்து வீடுகளுக்கு மட்டுமே அனுமதி பெற்று, ஏழு வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்துள்ளார். இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி நல வாரியத்திடம் சிவசுப்ரமணியன் புகார் அளித்துள்ளார். ஆனால், அவை முறையான நடவடிக்கை எடுக்காததால், கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில், அனுமதி மீறி கட்டப்பட்ட குடியிருப்புக்கு 'சீல்' வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பின்படி, நேற்று காலை 10:30 மணிக்கு, அக்குடியிருப்பில் உள்ள ஐந்து வீடுகளை பூட்டி, மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். மீதமுள்ள இரு வீடுகளில் வசிப்போர், வரும் சனிக்கிழமை வரை கால அவகாசம் கேட்டுள்ளனர்.