இரட்டிப்பு லாபம் தருவதாக மோசடி செய்தவர் மீது வழக்கு
கொடுங்கையூர், கொடுங்கையூரில் தொழிலில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி, 5 லட்ச ரூபாய் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கொடுங்கையூர், திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் அன்சர் அலி, 43. அதே பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது உறவினரான ரியாஸ் அகமது, 47, அன்சர் அலியிடம், தான் செய்யும் அலுமினியம் பேப்ரிகேஷன் தொழிலில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.இதை நம்பிய அன்சர் அலி, கடந்த 2024ம் ஆண்டு, நவ., 5ம் தேதி, எஸ்.பி.ஐ., வங்கி மூலம், 5 லட்ச ரூபாய் பணப் பரிமாற்றம் செய்துள்ளார். ஆனால், ஏழு மாதங்களாகியும், இதுவரை ரியாஸ் அகமது கொடுத்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசில் அன்சர் அலி கொடுத்த புகாரின்படி, கானத்துார், சிராஜுதீன் தெருவை சேர்ந்த ரியாஸ் அகமது மீது வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.