வீடு விற்பதாக ரூ.95 லட்சம் மோசடி கொடுங்கையூர் நபர் மீது வழக்கு
கொடுங்கையூர்:வீடு மற்றும் நிலத்தை விற்பதாக, 95 லட்ச ரூபாய் பெற்று 13 ஆண்டுகளாக ஏமாற்றி வந்தவர் மீது, நீதிமன்ற உத்தரவை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இது குறித்து கொடுங்கையூரைச் சேர்ந்த கவுரி, 55, என்பவர், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அளித்த புகார்:நான் கொடுங்கையூர், யூனியன் கார்பைடு காலனி, 91வது தெருவில் வசித்து வருகிறேன். இவர், மீன் வியாபாரம் செய்து வருகிறார்.மீன் வியாபாரம் செய்யும்போது, பிலால் என்பவர் பழக்கமானார். பிலாலுக்கு சொந்தமாக கொடுங்கையூர், யூனியன் கார்பைடு காலனி, 91வது தெருவில் 600 சதுரடி வீட்டுடன் கூடிய, 3,800 சதுரடி இடம் உள்ளது.இதை 95 லட்ச ரூபாய்க்கு விற்பதாக கூறினார். இதை நம்பி, 95 லட்ச ரூபாய் கொடுத்து, கடந்த 2012ல் இடத்துடன் கூடிய வீட்டை வாங்கினேன்.அப்போது, பிலால் தன் இரு மகன்களும் மைனர் என்பதால், மேஜரானதும் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் எனக்கூற, பொது அதிகார பத்திரம் பெற்று, குடும்பத்துடன் வசித்து வந்தேன்.இந்நிலையில், கடந்த 2025 ஜனவரியில், பிரகாஷ் என்பவருக்கு 99 லட்ச ரூபாய்க்கு, வீட்டுடன் கூடிய 3800 சதுரடி இடத்தை விற்று, பத்திரப்பதிவு செய்துள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்தேன். பத்திரப்பதிவு செய்யாமல், பணத்தை பெற்று ஏமாற்றிய பிலால் மீது, நடவடிக்கை வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பத்திரப்பதிவு செய்யாமல், பணத்தை பெற்று ஏமாற்றிய பிலால் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, 10வது குற்றவியல் நீதிமன்றத்தில் கவுரி மனுதாக்கல் செய்துள்ளார்.வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை பதிவு செய்ய கொடுங்கையூர் போலீசாருக்கு உத்தரவிட்டதன்படி, நேற்று பிலால் மீது கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.