சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி வியாசர்பாடி தம்பதி மீது வழக்கு
எம்.கே.பி.நகர்:வியாசர்பாடி, எஸ்.எம்.நகர், 50வது பிளாக்கைச் சேர்ந்தவர் ராஜகோபால் - கலா தம்பதி. இவர்கள், 2021ல் நவ., முதல் 2022 அக்., மாதம் வரை, தீபாவளி சீட்டு நடத்தினர். இவர்களிடம், வியாசர்பாடி, சுந்தரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்த மதன்குமார், 41, உட்பட ஒன்பது பேர், மாதாமாதம் 2,000 முதல் 10,000 ரூபாய் வரை சீட்டு கட்டி வந்தனர்.சீட்டு காலம் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் ஒன்பது பேருக்கும், மொத்த தொகையாக 5.85 லட்சம் ரூபாயை தராமல், தம்பதி ஏமாற்றி வந்துள்ளனர்.இதுகுறித்து மதன்குமார், 10வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை பதிவு செய்ய, போலீசாருக்கு உத்தரவிட்டார். எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.