உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்: வாடிக்கையாளருக்கு ரூ.5,000 தர உத்தரவு

மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்: வாடிக்கையாளருக்கு ரூ.5,000 தர உத்தரவு

சென்னை: 'மது பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய் வசூலித்ததால், பாதிக்கப்பட்ட நபருக்கு, மாதவரம் ரவுண்டானா டாஸ்மாக் கடை விற்பனையாளர், இழப்பீடாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செம்பியம் பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர், வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், கடந்த மார்ச்சில், 240 ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில் வாங்கினேன். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தனர். டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயை திரும்ப வழங்கவும், இழப்பீடாக 1 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை, ஆணையத்தின் தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. ஆணையம் பிறப்பித்த உத்தரவில், 'மதுபான பாட்டிலுக்கு, கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தது, நியாயமற்ற வர்த்தகம் என்பதால், மாதவரம் ரவுண்டானா டாஸ்மாக் கடை விற்பனையாளர், மனுதாரருக்கு இழப்பீடாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை