உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனம்? கண்டறிவது சாத்தியமற்றது என்கிறது துறை

ஏரிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனம்? கண்டறிவது சாத்தியமற்றது என்கிறது துறை

சென்னை, 'சென்னையில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில், மனிதர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு ரசாயனங்கள் கலந்துள்ளதா என்பது குறித்து கண்டறிவது, இப்போதைக்கு சாத்தியம் இல்லை' என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில், மத்திய சுற்றுச்சூழல் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னையில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் புற்றுநோய், கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பெர்ப்ளூரோஅல்கைல், பாலிப்ளூரோஅல்கைல் ரசாயனங்கள் கலந்திருப்பதாக, சென்னை ஐ.ஐ.டி., அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம், நீரி உள்ளிட்ட அமைப்புகளின் ஆய்வுகளை மேற்கோள்காட்டி நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்பபாயம், இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற துறை தாக்கல் செய்த அறிக்கை: சென்னையில் உள்ள ஏரிகளில் புற்றுநோய், கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பெர்ப்ளூரோஅல்கைல், பாலிப்ளூரோஅல்கைல் ரசாயனங்கள் கலந்திருப்பது குறித்து, அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில், சென்னை ஐ.ஐ.டி., நீரி எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிலைகள் அமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர். நீர்நிலைகளில் பெர்ப்ளூரோஅல்கைல், பாலிப்ளூரோஅல்கைல் ரசாயனங்கள் எந்த அளவுக்கு இருந்தால் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கான தர நிலைகளை உருவாக்குவது சிக்கலான நடைமுறை. அதை முடிவு செய்வதற்கான தொழில்நுட்பங்களும், தேவையான நிதியும் தேவை என்பதை இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். பெர்ப்ளூரோஅல்கைல் குடும்பத்தில் சுமார் 9,000 ரசாயனங்கள் இருப்பதாக சி.எஸ்.ஐ.ஆர்., நீரி பிரதிநிதி குறிப்பிட்டார். இதன் வரம்பை தீர்மானிக்க, உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்துடன் இணைந்து ஒரு திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, எந்த அளவுக்கு ரசாயனங்கள் இருந்தால் மனிதர்களுக்கு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கான தர நிலைகளை உருவாக்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ