சென்னை : சென்னையில் கடந்த இரு தினங்களில், பல்வேறு இடங்களில், செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னையில் கொடுங்கையூர், அமைந்தகரை, பட்டினப்பாக்கம், திருவொற்றியூர், நீலாங்கரை, எம்.ஜி.ஆர்.நகர், குமரன் நகர், அசோக்நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த இரு தினங்களில் செயின் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அமைந்தகரை: அய்யாவு நாயுடு காலனியைச் சேர்ந்தவர் லத்திகா, இவரது கணவர் ராமய்யா இறந்து விட்டார். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில், காய்கறி வாங்க கடைக்கு சென்று விட்டு,அய்யாவு தெரு வழியாக, லட்சுமி அம்மாள் சந்திப்பில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர், லத்திகாவின் கழுத்தில் இருந்த, பத்து சவரன் தாலி செயினை, மின்னல் வேகத்தில் பறித்து சென்றார். இதுகுறித்து, அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
கொடுங்கையூர்: எம்.ஆர்.நகரை சேர்ந்தவர் சரோஜா. நேற்று காலை காய்கறி வாங்க மார்க்கெட் சென்று விட்டு திரும்பிய போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் சரோஜா கழுத்தில் அணிந்திருந்த, 10 சவரன் செயினை பறித்து சென்றனர். பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்துள்ளது. பட்டினப்பாக்கம்: கனகமலைராயன் தெருவில் வசிப்பவர் பிலோமினா. இவர் தனியார் பள்ளியில், நூலகராக உள்ளார். இவரும், இவரது வயதான அம்மாவும், வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். நடக்க முடியாத அம்மாவை வீட்டில் விட்டு விட்டு, நேற்று காலை பிலோமினா கோவிலுக்கு சென்றுள்ளார்.
மாலை வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டு அலமாரியில் இருந்த, 34 சவரன் நகை திருடு போயிருந்தது. அதே நேரத்தில், வீட்டு வேலைக்காரன் ஜான் என்பவரும், காணாமல் போய்விட்டார். இதுகுறித்து, பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். நீலாங்கரை: களத்து மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி உஷா, 25. உறவினரை சந்தித்து விட்டு, விவேகானந்தர் தெரு வழியாக வந்து கொண்டிருந்த போது, ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், உஷாவின் கழுத்தில் இருந்த, ஏழு சவரன் தாலியை பறித்துச் சென்றனர்.
திருவொற்றியூர்: வரதராஜன் தெருவைச் சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி பிரேமா, 29. வீட்டு வாசல் முன், குழந்தைக்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர், பிரேமாவின் ஐந்து சவரன் தாலியை அறுத்துக் கொண்டு மறைந்தார். அதே போல், திருவொற்றியூர் மேற்கு மாடவீதியில் வந்து கொண்டிருந்த வயதான பெண்மணியை கத்தி முனையில் மிரட்டி, அவரிடமிருந்து, 15 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.மேலும், மணலி மற்றும் எண்ணூர் பகுதியிலும், செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
நேற்று முன்தினம்: தொடர்ந்து நேற்று முன்தினம், கோடம்பாக்கம் பகுதியில், சாரதா என்ற பெண்ணிடம், ஒன்பது சவரன் நகையை, அவரது வீட்டருகில் நடந்து செல்லும் போது, டூவீலரில் வந்தவர்கள், பறித்துச் சென்றனர்.மேலும், குமரன் நகர் பகுதியில் சரோஜா என்ற பெண்ணிடம் இருந்து ஏழு சவரன் நகை, திருவான்மியூரில் திலகவதி என்ற பெண்ணிடம் எட்டு சவரன் நகை ஆகியவை பறிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் நேற்று முன்தினம்மட்டும் 24 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக, தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் பல்வேறு இடங்களில் அரங்கேறி வருகின்றன. போலீசார் தங்களுடைய கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.