| ADDED : செப் 22, 2011 12:24 AM
மேடவாக்கம் : தொடர் மழை காரணமாக, மேடவாக்கம், அன்னை இந்திரா நகரில், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. குடியிருப்பு பகுதிகளில் புகுந்த மழை நீர் நேற்று மாலை வரை வடியாததால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேடவாக்கம், அன்னை இந்திரா நகரில், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. தொடர்ந்து பல மணி நேரம் பெய்த மழையால், இங்குள்ள பொன்னியம்மன் கோவில் தெரு, ராஜு தெரு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அன்னை இந்திரா நகருக்குள் வாகனங்கள் செல்ல முடியவில்லை. அங்குள்ள சில வீடுகளிலும் மழை வெள்ளம்புகுந்தது. அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சிலர் கூறுகையில், ''அன்னை இந்திரா நகர் மிகவும் தாழ்வான பகுதி. மழைநீர் செல்வதற்கு முறையான மழைநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால், வேளச்சேரி மெயின்ரோட்டில் இருந்து, மழைநீர் இந்நகருக்குள் வருகிறது. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது. கடும் மழை பெய்தால், பாதிப்பு அதிகம் இருக்கும். இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர். நேற்று மாலை வரை மழை நீரை அகற்ற மேடவாக்கம் ஊராட்சி நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதனால், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்தனர். தொடர் மழை சீசன் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இப்பகுதியில் வெள்ளம் தேங்காமல் இருக்க போதியநடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.