உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாடநூல் கழகக் கிடங்கிற்கு படையெடுக்கும் பாம்புகள் : அச்சத்தில் ஊழியர்கள்

பாடநூல் கழகக் கிடங்கிற்கு படையெடுக்கும் பாம்புகள் : அச்சத்தில் ஊழியர்கள்

தரமணி : தமிழ்நாடு பாடநூல் கழகக் கிடங்கின் கட்டடங்கள் சேதமடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அச்சத்துடன் நாட்களை நகர்த்தி வருகின்றனர். தரமணி - வேளச்சேரி பை-பாஸ் சாலையில், தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கான கிடங்கு அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு வழங்கப் படும் பாடநூல்கள், அச்சகங்களிலிருந்து பெறப்பட்டு, இங்கு பாதுகாக்கப்படுகிறது.பின்னர், மாவட்ட வாரியாக, அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. புத்தகங்களை பாதுகாத்து வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அறைகள் நீண்டகாலமாக பராமரிக்கப்படவில்லை. கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்து, மோசமான நிலையில் காட்சியளிக்கின்றன. பாம்புகள் படையெடுப்பு: கதவுகளின் அருகே சுவர்கள் உடைந்து காணப்படுவதால், புத்தக அறைகள் எலிகளின் கூடாரமாக காட்சியளிக்கின்றன. பாடநூல் கழக குடோனுக்கு அருகில், உணவு வழங்கல் துறைக்கு சொந்தமான அரிசிக் கிடங்கு ஒன்று உள்ளதால், அங்கு வரும் ஏராளமான எலிகள், புத்தக அறைகளில் உள்ள ஓட்டைகளின் வழியே உள்ளே புகுந்து விடுகின்றன. இந்த எலிகளை பிடிக்க பாம்புகளும் அதிகளவில் வளாகத்திற்கு வருவதால், ஊழியர்கள் மிகுந்த அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வப்போது, வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு, இந்த பாம்புகள் பிடிக்கப்பட்டாலும், இதனை, தடுக்க நிரந்தர தீர்வு எடுக்கப்படவில்லை.

மழைநீரால் பாதிப்பு: அதே போல், மழைக்காலங்களில் இந்த ஓட்டைகள் வழியாக, தண்ணீர் உள்ளே புகுவதால், சேமித்து வைக்கப்பட்டுள்ள, லட்சக்கணக்கான புத்தகங்கள் சேதமடைகின்றன. கட்டடத்தின் தளம் மற்றும் சுவர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மோசமான நிலையில் காட்சியளிப்பதால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ''குடோனுக்கு அருகில் அரிசி கிடங்கு ஒன்று உள்ளதால், அங்கு வரும் ஏராளமான எலிகள் புத்தக அறைகளில் புகுந்துவிடுகின்றன. இதனால், புத்தகங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் இங்கு பணிபுரிந்து வருகிறோம். குடோனில் உள்ள குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீண்ட நாட்களாக மனுக்கள் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,' என்றார்.

ஆட்கள் பற்றாக்குறை: பாடநூல் கழகத்தில் ஆறு குடோன்கள் உள்ளன. இங்கு, அச்சகங்களில் இருந்து கொண்டுவரப்படும் பாடநூல்களை, குடோனில் வைப்பதற்கும், குடோனிலிருந்து புத்தகங்களை பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.ஒரு குடோனுக்கு குறைந்த பட்சம் இரண்டு ஊழியர்களாவது இருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரு குடோனுக்கு ஒருவர் மட்டுமே உள்ளதால், பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.எனவே, ஒவ்வொரு குடோனுக்கும் கூடுதலாக ஊழியர்களை நியமித்தால், பணிகள் விரைவில் நடைபெற உதவியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை