சென்னை : பருவ மழையை முன்னிட்டு, மாநகராட்சி பகுதிகளில் செப்டம்பர் முதல், மூன்று மாதங்களுக்கு, சாலைகளை தோண்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பருவ மழையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநில மற்றும் மத்திய அரசின் துறைகளுடன் மாநகராட்சி நேற்று ஆய்வு நடத்தியது. மேயர் சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் மற்றும்நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித் துறை, வானிலை ஆராய்ச்சி மையம், கடலோர காவல்படை, குடி நீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட 32 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசிய மேயர் சுப்ரமணியன், ''பருவமழையை முன்னிட்டு மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும், திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய திட்டப்பணிகளை பருவமழைக்கு பின், தொடங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி மட்டுமல்லாது, பிற துறை களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி, இரண்டு கட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. 500 கி.மீ.,க்கு நடைபெறும் இப்பணியில் முதல் கட்டமாக, 165 கி.மீ., பணிகள், பருவ மழைக்கு முன், முடிக்கப்படும். மற்ற பணிகள் பருவ மழைக்குப் பின்னர் தொடங்கப்படும்'' என்றார்.
மேலும், பருவ மழையை முன்னிட்டு, செப்டம்பர் மாதம்முதல், மூன்று மாதங்களுக்கு சாலைகளை தோண்டி நிறைவேற்றப்படும் பணிகளுக்கு மாநகராட்சி தடை விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்திற்கு பின்னரே, அதற்கான அனுமதியை மாநகராட்சி வழங்கும். நிவாரண மையங்கள்: கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, நான்கு மையங்கள் மாநகராட்சி பகுதியில் தயார் நிலையில் உள்ளன. ஒரே நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, ம்மையங்களில் இருந்து உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைச் சேதங்கள் குறித்து, உடனுக்குடன் தகவல்களை பெறவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை, திறக்கப்பட்டுள்ளது. இதில், எந்த நேரமும் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம், 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், கட்டுப்பாட்டு அறையில் தகவல் பெறுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நான்கு நபர்கள் இதில் தொடர்பு கொண்டு பேசலாம். மழை நிவாரணத்திற்காக தனி தொலைபேசி அமைக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கும் போது, அவற்றை உடனே வெளியேற்ற 60 மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு 88 மின் மோட்டார்கள், கொடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில், நீர் தேங்கும் போது அதை உடனே, வெளியேற்ற இவை பயன்படுத்தப்படும். மேலும், 200 எச்.பி., சக்திகொண்ட ஏழு மின் மோட்டார்களும், மாநகராட்சி வசம் உள்ளன.
கடலோர காவல்படை தயார்: மழை வெள்ளத்தில் பாதிக்கப்படுவோரை மீட்க, கடலோர காவல்படை மற்றும் பிற துறைகளிடம் இருந்து மோட்டார் படகுகள் உதவிக்கு பெறப்படும். அண்ணா சாலை, ஈ.வெ.ரா., பெரியார் சாலை ஆகியவற்றில் மழை நீர் தேங்குவதை அப்புறப்படுத்த, நெடுஞ்சாலைத் துறைக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் மாநகராட்சியுடன் இணைந்து, பருவமழையால் ஏற் படும் பாதிப்பை சமாளிக்க ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. சென்னை நகரில் பல முக்கிய சாலைகள், பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி தோண்டப்படுவதும், பின் அதை சரியாக மூடாமல் அப்படியே விட்டுவிடுவதும் வாடிக்கையாக உள்ளது. இது போன்ற பள்ளங்களில் மழை நீர் மறைத்து விடுவதால், ஏராளமான விபத்துகள் நடந்து வந்தன. பருவமழை காலத்தில், சாலையை தோண்ட மாநகராட்சி தடை விதித்துள்ளதால், புதிய பள்ளங்கள் எதுவும் தோன்றாது; பயமின்றி சாலைகளில் பயணிக்கவும் முடியும்.
'மழையை கணிக்க முடியவில்லை' : 'நேற்றும், நேற்று முன்தினமும், சென்னை மற்றும், சுற்றுப் பகுதிகளில், பெய்த மழையை கணிக்க முடியவில்லை,' என வானிலை ஆராய்ச்சி மைய அலுவலர் தெரிவித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மழை பெய்யும் என, முன் அறிவிப்பு செய்தோம். ஆனால், மழையின் அளவை கணிக்க முடியவில்லை. நுங்கம்பாக்கம் பகுதியில் 15 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. ஆனால், மீனம்பாக்கத்தில் ஒரு சென்டி மீட்டர் அளவே மழை பதிவாகியது. இதற்கு வெப்ப சலனத்தில் ஏற்பட்ட திடீர் மாறுதலே காரணம், மழை பெய்யும் என்று முன் அறிவிப்பை, வானிலை ஆராய்ச்சி மையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். நேற்று முன் தினம் பெய்த மழையின் போது, பலத்த இடியும், மின்னலும் ஏற்பட்டது. இதன் தாக்கத்தை பதிவு செய்ய வானிலை ஆராய்ச்சி மையத்தில் உரிய கருவிகள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.