| ADDED : ஆக 29, 2011 11:00 PM
நன்மங்கலம் : நன்மங்கலம் ஊராட்சியின் பிரதான சாலையில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகளை, அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர்.வேளச்சேரியை அடுத்துள்ளது நன்மங்கலம் ஊராட்சி. இப்பகுதியின் பிரதான சாலையாக விளங்கும் அஸ்தினாபுரம் - நன்மங்கலம் சாலையில், தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயக்கப்படுகின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் குடிநீர் அதிகரித்துள்ளதால், செங்கல்பட்டு, பொத்தேரி, கூடுவாஞ்சேரி மற்றும் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிணற்று நீரை வாங்கும் சில தனியார் நிறுவனங்கள், அவற்றை லாரிகளில் கொண்டு வந்து, துரைப்பாக்கம், ராஜிவ் காந்தி சாலை, கொட்டிவாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகிறது. இந்த லாரிகள் அனைத்தும் நன்மங்கலம் ஊராட்சியின் பிரதான சாலை வழியாகவே சென்று வருகின்றன.இரவு, பகல் என 24 மணி நேரமும் லாரிகள் தொடர்ந்து இயக்கப்படுவதால், இந்த சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் நன்மங்கலம் பகுதிக்கு வருவதில்லை. மேலும், வேகமாக இயக்கப்படும் இந்த லாரிகளால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.இதை கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று, அவ்வழியாகச் சென்ற 27 தண்ணீர் லாரிகளை சிறை பிடித்தனர். தகவலறிந்து அங்கு வந்த பள்ளிக்கரணை போலீசார், விதிகளை மீறி இயக்கப்படும் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.