சென்னை மாணவி சிலம்பத்தில் முதலிடம்
சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த பள்ளி மாணவியருக்கான மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், சென்னையின் ரோஷினி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2025ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், சென்னை உட்பட 15 மாவட்டங்களில் நடந்து வருகின்றன. நேற்று முடிந்த பள்ளி மாணவியருக்கான சிலம்ப போட்டியின், 70 கிலோ பிரிவில், சென்னை எவர்வின் பள்ளி மாணவி ரோஷினி சிறப்பாக விளையாடி, முதலிடம் பிடித்து அசத்தினார். அடுத்ததாக, சேலம் மாவட்டத்தின் அரசு மாடல் பள்ளி மாணவி வர்ஷா இரண்டாம் இடமும், அரியலுார் மாவட்டத்தின் ராம்கோ வித்யா மந்திர் பள்ளி மாணவி திவ்யாஸ்ரீ மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தினர். இதன் 50 - 60 கிலோ பிரிவில், தேனியின் ஹரிணி, 60 - 70 கிலோ பிரிவில், சேலம் மாவட்டத்தின் தனிஷா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.