மீன் செந்து மிதந்த பருத்திப்பட்டு ஏரியில் சென்னை பல்கலை நிபுணர் திடீர் ஆய்வு
ஆவடி, ஆவடி, பெரியார் நகரில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பருத்திப்பட்டு ஏரியில், இரண்டு வாரமாக மீன் செத்து மிதப்பது தொடர்கிறது. இதுவரை, ஏரியில் செத்து மிதந்த, 12,00 கிலோ மீனை அகற்றி, பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.ஏரியில் கழிவுநீர் கலப்புதான் இதற்கு காரணம் என்ற சர்ச்சை எழுந்தது. இம்மாதம், 8ம் தேதி, மீன்வளத் துறையினர், ஏரியில் ஆய்வு செய்தனர். இறந்த மீன் மாதிரி மற்றும் நீர் மாதிரியை, ஆய்வுக்கு எடுத்து சென்றனர். ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.தொடர்ந்து மீன் இறப்பதை தடுக்க, மீன்வளத்துறை அறிவுரைப்படி, சில தினங்களுக்கு முன், ஏரியில் கிளிஞ்சல் சுண்ணாம்பு தெளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது.இந்நிலையில், சென்னை பல்கலை சார்பில், தாவரவியல் துறை முனைவர் ஸ்ரீனிவாசன், பருத்திப்பட்டு ஏரியில் நீரின் மாதிரியை நேற்று ஆய்வுக்கு எடுத்து சென்றார். இதுகுறித்து, ஸ்ரீனிவாசன் பேட்டி :ஏரியில், நீர் முழுதும் பச்சை நிறமாக மாறி உள்ளது. மூச்சு திணறல் ஏற்பட்டு, மீன் இறந்ததாக வெளியான செய்தி உண்மைதான். வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சுத்திகரிக்கப்படாமல் ஏரியில் கலப்பதால், இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது. கழிவு நீரில் உருவாகும் நன்னீர் பாசி, ஏரியில் படர்ந்து, நீரில் உள்ள உயிர் வாயு முழுதையும் பயன்படுத்திக் கொள்ளும். இதனால், சரியாக உயிர் வாயு கிடைக்காமல், மீன் செத்து மிதந்துள்ளது. இதை 'பயோலஜிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட்' என்று கூறுவோம்.நீரின் மாதிரி சேகரித்து, நுண்ணியல் கருவி வாயிலாக ஆய்வு செய்யும்போது, நீரில் கலந்துள்ள கழிவு விபரம் தெரிந்து விடும். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மிகவும் ஆபத்தானது. நீரில் கரிம வளம் அதிகரிக்கும்போது இவ்வாறு நடக்கும். இதை, சிவப்பு அலை என்று கூறுவோம். எனவே, நீர்நிலைகளில் நேரடியாக கழிவுநீர் கலக்காமல் தடுக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். **