சென்னை/கோவை/மதுரை/ ------------ மீண்டும் லிங்க் ரயில் இயக்க கோரிக்கை
சென்னை, மே 16- 'துாத்துக்குடி - சென்னை; துாத்துக்குடி - கோவை லிங்க் ரயில்களை, மீண்டும் இயக்க வேண்டும்' என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, துாத்துக்குடி மாவட்ட பயணியர் நலச் சங்க செயலர் பிரமநாயகம் கூறியதாவது: கொரோனா பாதிப்பின்போது நிறுத்தப்பட்ட, பெரும்பாலான ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், துாத்துக்குடி - சென்னை; துாத்துக்குடி - கோவை லிங்க் ரயில்கள், மீண்டும் இயக்கப்படவில்லை. இந்த ரயில்களின் சேவையை துவக்கினால், துாத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்ட பயணியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.லிங்க் ரயில்களின் சேவையை, முற்றிலும் நிறுத்தி விட்டதாக, தெற்கு ரயில்வே கூறுகிறது. ஆனால், சில மாநிலங்களில், பயணியர் கோரிக்கைக்கு ஏற்ப, தற்போது லிங்க் ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, துாத்துக்குடி லிங்க் விரைவு ரயில்களை, மீண்டும் இயக்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ***