உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் மருத்துவ காப்பீடு முகாம் அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் கைகலப்பு

முதல்வர் மருத்துவ காப்பீடு முகாம் அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் கைகலப்பு

நெற்குன்றம்:நெற்குன்றத்தில் நடந்த முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட முகாமில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் 145வது வார்டு கருணீகர் தெருவில் உள்ள தனியார் பள்ளியில், மருத்துவ காப்பீடு திட்ட முகாம் நேற்று நடந்தது. முகாம் குறித்து அந்த வார்டின் அ.தி.மு.க., கவுன்சிலரான சத்யநாதனுக்கு தகவல் மற்றும் அழைப்பு விடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதையறிந்த கவுன்சிலர், தன் வார்டில் உள்ள பகுதி மக்களுடன் முகாம் நடக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு வந்த தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதி மற்றும் மண்டலக்குழு தலைவர் ராஜன் ஆகியோரிடம், அ.தி.மு.க., கவுன்சிலர் சத்ய நாதன் வாக்குவாதம் செய்தார். ''இது அரசு விழாவா? அல்லது கட்சி விழாவா?'' என்றார். இதனால் அங்கிருந்த அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. கோயம்பேடு போலீசார் இருதரப்பினரையும் சமரசப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அ.தி.மு.க.,வினர் கூறிய தாவது: இந்த வார்டு அ.தி.மு.க., வசம் உள்ளதால், திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியவில்லை. தவிர அரசு திட்ட முகாமை, தி.மு.க., விழா போல் மாற்றி உள்ளனர். முகாம் குறித்த துண்டு பிரசுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் புகைப்படத்துடன் வழங்கப்பட்டுள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் மருத்துவ காப்பீடு சேவையும் உள்ள நிலையில், விளம்பரத்திற்காக இந்த முகாமை நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க.,வினர் கூறுகையில், 'அ.தி.மு.க., கவுன்சிலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அரசியல் செய்ய வேண்டும் என, பிரச்னை செய்கிறார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ