உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிக்கில் செல் அனீமியா நோய் பாதித்த குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படலாம்

சிக்கில் செல் அனீமியா நோய் பாதித்த குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படலாம்

சென்னை:''சிக்கில் செல் அனீமியா நோய் பாதித்த குழந்தைகளுக்கு, பக்கவாத பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அறிவதற்கான பரிசோதனை அவசியம்,'' என, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் லட்சுமி கூறினார்.உலக சிக்கில் செல் அனீமியா ஒழிப்பு தினத்தையொட்டி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், மருத்துவமனையின் இயக்குநர் எஸ்.லட்சுமி கூறியதாவது:குழந்தைகளுக்கு, 206 எலும்பு மஜ்ஜைகளில் இருந்தும் ரத்த அணுக்கள் உருவாகும். குறிப்பிட்ட வயதுக்குப் பின், அவை தடைபட்டு முக்கிய மஜ்ஜைகளில் இருந்து மட்டும் அணுக்கள் உற்பத்தி செய்யப்படும்.அதில் ஏற்படும் சில மரபணு மாற்றங்கள் காரணமாக, 'ஸ்டெம் செல்' உற்பத்தி தடைபடலாம் அல்லது சேதமடையலாம்.இந்த பாதிப்பு ஏற்படும்போது, 'சிக்கில் செல் அனீமியா' நோய் ஏற்படும். இது மரபணு வழியாக வரும் பிரச்னை.இந்த பாதிப்புக்குள்ளானவர்களின், ரத்த சிவப்பணுக்கள் வளைந்த அரிவாள் வடிவத்தில் மாறிவிடும். இதனால், உடலுக்கு அணுக்களால் ஆக்சிஜனை கடத்த முடியாது.கடுமையான வலி, ரத்த சோகை, கை - கால் வீக்கம், தொற்றுநோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சிக்கில் செல் அனீமியா ஏற்பட்ட குழந்தைகளுக்கு குருதியேற்ற சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை வாயிலாக அந்நோயை கட்டுப்படுத்தலாம்.இதுகுறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.அதன் ஒருபகுதியாக சிக்கில் செல் அனீமியா குழந்தைகளுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை அறிவதற்கான, 'டிரான் க்ரானியல் டாப்ளர் அல்ட்ரா சவுண்ட்' எனப்படும் மூளை நரம்பியல் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள் செய்யப்பட்டது.சிக்கில் செல் அனீமியா போன்ற மரபணு சார்ந்த பாதிப்புள்ள குழந்தைகளுக்கு இதுபோன்ற பரிசோதனைகள் அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ